வெளிநாட்டுக் கதை எதுவும் வேண்டாம். இந்த நாடு ஒரு தீவு என்பதால் எமக்கு இயற்கை பாதுகாப்பு கிடைத்தது. அதனால்தான், கொரோனா நோயாளர் தொகை 3 ஆயிரத்துக்குள் நிற்கின்றது. ஆனால், நாட்டை முன்கூட்டியே மூடி 'லொக் டவுன்' செய்து 3 ஆயிரம் கொரோனா நோயாளர்களை 300 இற்குள் நிறுத்தி இருக்கலாம்." - இவ்வாறு முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

"நீங்கள் மார்ச் 19ஆம் திகதி தேர்தல் வேட்புமனு இறுதித் தினம் வரை, அதாவது பிரதான எதிர்க்கட்சி உடைவது உறுதியாகும்வரை, அரசியல் இலாபத்தை மனதில்கொண்டு, நாட்டை திறந்து வைத்தீர்கள். இதனால்தான் முழு நாடும் இன்று பாடுபடுகின்றது" எனவும் அரசிடம் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் நேற்றிரவு பிரபல சிங்கள மொழி அரசியல் விவாத நிகழ்வு நடைபெற்றது. ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் மனோ கணேசன், அளவதுவள, அரசு தரப்பில் அருந்திக பெர்னாண்டோ, காஞ்சன விஜயசேகர ஆகிய முன்னாள் எம்.பிக்கள் கலந்துகொண்டு கடும் காரசாரமாக விவாதித்த இந்த நிகழ்வில் முன்னாள் எம்.பி. மனோ கணேசன் மேலும் கூறியதாவது:-

"ஜனாதிபதி, மார்ச் 2ஆம் திகதியன்று நாடாளுமன்றத்தைக் கலைத்து, வேட்புமனு மற்றும் தேர்தல் திகதிகளை அறிவித்தார். 

இதற்குப் பதில் அவர் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து விட்டு, முழு நாட்டையும் கொரோனாவை எதிர்த்துப் போராடும் தயார் நிலைக்குக் கொண்டு சென்று இருக்கலாம். இதை அவர் செய்யவில்லை.

பொறுப்பற்ற நிலையில் வேட்புமனு மற்றும் தேர்தல் திகதிகளை அறிவித்ததால், நாடு திறந்த நிலையில் இருந்தது. கட்சிகளின் இலட்சக்கணக்கான ஆதரவாளர்கள் நாடு முழுக்க ஆங்காங்கே கட்சி அலுவலகங்களில் கூடினார்கள். 

அதற்கிடையில் கொழும்பில் பல்லாயிரக்கணக்கானோர் கூடும் றோயல் - தோமியன், ஆனந்த - நாலந்த கல்லூரிகளின் இறுதிப்போட்டிகளையும் நடத்த விட்டு, அதில் ஜனாதிபதி மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டு கொரோனானவை வளர விட்டீர்கள். 

வேட்புமனு முடிந்த மறுநாளே, அதாவது 20ஆம் திகதியே நாட்டை 'லொக்டவுன்' செய்தீர்கள். அதாவது வரும் ஆபத்து பற்றி தெரிந்துகொண்டே, அரசியல் இலாபம் கருதி செயற்பட்டீர்கள்.

பெப்ரவரி மாதம் 25ஆம் திகதியும், மார்ச் மாதம் 5ஆம் திகதியும் என இரண்டு முறை அன்றைய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில், கொரோனா ஆபத்து பற்றி கேள்வி எழுப்பி, உரை நிகழ்த்தினார். 

அப்போது நாடு கொரோனா பற்றி அறிந்திருக்கவில்லை. ஆனால், சஜித் சபையில் பிரதமரையும், சுகாதார அமைச்சரையும் இதுபற்றி எச்சரிக்கை செய்தார். நாட்டை மூடி, விமான நிலையங்களை மூடி நாட்டை தயார் நிலையில் வைக்கச் சொன்னார். நீங்கள் சபையில் அவரைக் கிண்டல் செய்தீர்கள். அவர் சொன்னதைக் கணக்கில் எடுக்கவில்லை.

இன்று கொரோனா ஒரு சுகாதாரப் பிரச்சினை மட்டும் இல்லை. அது வீட்டுப் பொருளாதாரத்தையும், நாட்டுப் பொருளாதாரத்தையும் நாசமாக்கி விட்டது. நோயில் இறந்து, நோயால் சுகவீனமடைந்து, வருமானம் இழந்து, தொழில்கள் நலிவடைந்து, குடும்ப நிகழ்வுகள்கூட வடத்த முடியாமல் தவிக்கும் அனைவருக்கும் நீங்கள் பொறுப்பு கூற வேண்டும். இனி கொரோனா இரண்டாம் அலை வந்தால் நிலைமை மோசமடையும். அதற்கும் நீங்கள் பொறுப்புக்கூற வேண்டும்.

இங்கே நான் அர்ப்பணிப்புடன் செயற்படும் சுகாதாரத்துறையினரை குறை கூறவில்லை. இந்தநிலையிலும் பொறுப்புடனும், தியாக உணர்வுடனும் செயற்படும் சுகாதார, இராணுவ, பொலிஸ் அதிகாரிகளை நாம் மனதாரப் பாராட்டுகின்றோம். 

அவர்களுக்கு வேண்டிய தேவைகளைக்கூட நீங்கள் ஒழுங்காக நிறைவேற்றவில்லை. மார்ச் முதலாம் திகதியன்றே நாட்டை 'லொக் டவுன்' செய்யாமல் திறந்து வைத்து, அரசியல் இலாபத்தை மனதில்கொண்டு இங்கே பொறுப்பற்று செயற்பட்டது, உங்கள் அரசுதான். இதை வரலாறு பதிவு செய்யும்" - என்றார்.

TamilBM

உங்கள் பதிவை TamilBM திரட்டியில் இணைக்க