வன்னியில் பல போலியான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும் எமது கட்சிக்கு 42,524 வாக்குகளை மக்கள் வழங்கியுள்ளனர். இது எமக்கு பாரிய வெற்றியாகும் என்று முன்னாள்பிரதி அமைச்சரும், பாராளுமன்றத்தேர்தலில் பொதுஐன பெரமுன சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வேட்பாளருமான காதர் மஸ்தான் தெரிவித்தார்.

வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்.....

இம்முறை இடம்பெற்ற தேர்தலில் எனக்கும் எனது கட்சிக்கும் வாக்களித்த அனைத்து மக்களுக்கும் முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். 

வன்னிமாவட்டத்தில்  அதிக வாக்குகள் பெற்ற  இரண்டாவது கட்சியாக நாம் இருக்கின்றோம். கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் எமது வளர்ச்சி பாரிய அளவில் இருக்கின்றது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 26 ஆயிரம் வாக்குகளைப் பெற்றநிலையில் இம்முறை அதிக வாக்குகள் கிடைத்துள்ளமை பாரிய வெற்றியாகும். அதற்காக எமது மக்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீதும் அதே போன்று நாட்டினுடைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ்ச மீதும் என் மீதும் வைத்த நம்பிக்கையின் அடிப்படையில்  எனக்கு இந்த வாக்குகளை அளித்துள்ளீர்கள். எமக்கு அளிக்கப்பட்ட வாக்குகளின் பெறுமதியை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சிரேஷ்ட அமைச்சர்களிடம் தெரிவித்து அதனூடாக வன்னி மாவட்டத்திற்கு தேவையான நிலையான அபிவிருத்திகளையும், திட்டமிட்ட அபிவிருத்திகளையும் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பேன்.

அதே போன்று இங்குள்ள மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கான சுயதொழில் வாய்ப்புகள் மற்றும் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கு எமது தலைவர்களோடு கலந்துரையாடி ஏற்பாடுகளை செய்வேன்.

மக்கள் அதிகப்படியான வாக்குகளை அளித்திருந்த போதும் இன்னும் சொற்பஅளவு வாக்குகளைப் பெற்றிருந்தால் இரண்டு ஆசனங்களை பெற்றிருக்கக்கூடிய வாய்ப்பு எமக்கு இருந்தது.

அதனை பெற முடியாததையிட்டு மனவருத்தம் அடைகின்றேன்.எமது கட்சியைச் சார்ந்த ஏனைய வேட்பாளர்கள் சிலர் தேர்தல் பிரச்சாரத்தின்போது இனவாத கருத்துக்களை கூறியதன் விளைவாகவே எமது கட்சிக்கான வாக்குகள் குறைவடைந்தது. 
இல்லாவிட்டால் நாங்கள் இரண்டு பிரதிநிதிகளை நிச்சயம் பெற்றிருக்கலாம்.இது ஒரு நல்ல படிப்பினையாக அமைந்துள்ளது.  இனிவரும் காலங்களில் எமது சகோதர வேட்பாளர்களுக்கு இது தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்குவதுடன், கட்சியின் உயர்பீடங்களோடு கதைத்து  முன் நோக்கி செல்வது தொடர்பாக தீர்மானிக்கப்படும்.

இதேவேளை எமதுகட்சி அதிகமான வாக்குளை பெற்றுள்ளமையால் வன்னிக்கான சிரேஸ்ட  அமைச்சுப்பதவி ஒன்று வழங்குவது தொடர்பாக கட்சியின் உயர்பீடம் தீர்மானிக்கும் என்றார்.

Post Tags:

TamilBM

உங்கள் பதிவை TamilBM திரட்டியில் இணைக்க