டிக் டாக் செயலியை தடை செய்ய நடவடிக்கை

குடும்ப கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையிலும், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் உள்ள டிக்டாக் செயலியை தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும் என தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார். 

சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய மனிதநேய ஜனநாயகக் கட்சி உறுப்பினர் தமீமுன் அன்சாரி, ஆபாசமாகவும், தமிழ் குடும்ப கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையிலும், சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையிலும், டிக்டாக் செயலிக்கு உள்ளதாகவும் தெரிவித்தார். இரவு பகல் பாராமல் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் இந்த செயலியில் மூழ்கி கிடப்பதால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை உள்ளதாகவும் எனவே இதற்கு அரசு உடனடியாக தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்..

அதற்கு பதில் அளித்த அமைச்சர் மணிகண்டன் டிக்டாக் செயலியை தடை செய்வது தொடர்பான கோரிக்கை ஏற்புடையதுதான் என்றார். ரஷ்யாவில் இருந்த ப்ளூவேல் சர்வரை தடை செய்ய மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுத்தது போல, டிக்டாக் செயலியையும் தமிழகத்தில் தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

டிக் டாக் செயலியை அரசு தடை செய்தால் முதலில் மகிழ்ச்சியடைவது தான்தான் என பா.ஜ.க., தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்..

டிக்டாக் செயலி பிடித்த பாடல்களுக்கு நடனம் ஆடியும் பிடித்த வசனங்களை வாயசைத்து பதிவு செய்தும் சமூக வலைதளங்களில் பதிவிட பயன்படுத்தப்படுகிறது. மக்களின் தனித் திறமைகளை வெளிப்படுத்த தொடங்கப்பட்ட டிக்டாக் செயலியில் பயனாளிகளின் பதிவுகளுக்கு கட்டுப்பாடோ தணிக்கையோ இல்லாததால் ஆபாசங்களுக்கு வழிவகுக்கும் வகையில் மாறிவிட்டதாக புகார் எழுந்துள்ளது.