“மிலிட்டரிக்காரனுக்கு மட்டும் தான் பொண்ணு தருவோம்…!” தேசப் பற்றுள்ள கிராமம்….!

தேனி மாவட்டம் வத்தலக்குண்டில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது, மேலக்கோவில்பட்டி. இந்தக் கிராமத்தில் உள்ளவர்களின் பிள்ளைகள் அனைவருமே, ராணுவத்தில் பணி புரிகிறார்கள்.

சமீபத்தில் நடைபெற்ற புல்வாமா தாக்குதலில் உயிர் இழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, இந்த கிராமமே திரண்டு, கைகளில் மெழுகுவர்த்திகளை ஏந்தி அஞ்சலி செலுத்தியது.

தேசப் பற்றுள்ள  இந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் உள்ள ஆண்கள் எல்லாம், ராணுவத்தில் பணி புரிவதை தங்கள் வாழ்நாள் லட்சியமாகக் கொண்டிருக்கிறார்கள்.

தற்போது இங்குள்ள வயதான ஆண்கள் எல்லாம், ராணுவத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்கள் தான். அப்பா, மகன், மருமகன் என எல்லா ஆண்களுமே, அவரவர் கல்வித் தகுதிக்கு ஏற்ப, கடினப்பட்டு, பயிற்சி செய்து, உடல் திறனை வளர்த்துக் கொண்டு, நன்றாகப் படித்து, தேர்வு எழுதி, எப்படியும், ராணுவத்திற்குள் நுழைந்து விடுகிறார்கள்.

ராணுவத் தேர்வில், தோல்வி அடைந்தாலும், தொடர்ந்து தேர்வாகும் வரை, விடாமல் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

இதற்கென இந்த ஊரிலே, உடற் பயிற்சிக் கூடங்களையும் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

இவர்கள் கூறிய தகவல் இன்னும் ஆச்சர்யமாக இருந்தது. “எங்கள் ஊரிலே அனைவரும், மிலிட்டிரியில் வேலை பாக்குறவங்க தான். இந்த ஊரில் உள்ள பெண்கள் பலர், மருமகளாக வந்தவர்கள்.

அதே போல், எங்கள் ஊரில் பிறந்த பெண்ணை மிலிட்டிரியில் வேலை பார்ப்பவருக்குத் தான் கொடுப்போம். வேறு எந்த வேலை செய்தாலும், வந்து பெண் கேட்டால் தர மாட்டோம்.

சுத்துப்பட்டியிலே ஊர்க்கார்கள், இந்த ஊரை மிலிட்டிரி கிராமம் என்று தான் அடையாளம் சொல்வாங்க. அந்த அளவுக்கு, இந்த நாட்டை நாங்கள் நேசிக்கிறோம். சமீபத்தில் உயிர் இழந்த 40 பேருக்காக, ஊர் கூடி அஞ்சலி செலுத்தினோம். இந்தியாவும், ராணுவமும் எங்கள் உயிர் மூச்சு,” என்றனர்.

தேச பக்தி கொண்ட, இந்த கிராமத்திற்கு ஒரு சல்யூட்….!