புதிய வடிவம் பெறும் இலங்கை-யின் வரைபடம்...

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பாரிய அபிவிருத்தி திட்டங்களுக்கு பின்னர் வடிவமைக்கப்பட்டுள்ள இலங்கையின் புதிய வரைபடம் இம்மாதம் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது!

நில அளவைத்திணைக்கள ஆணையாளர் பி.எம்.பி உதயகாந்த் அவர்கள் இதுகுறித்து தெரிவிக்கையில்... "கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பாரிய அபிவிருத்தி திட்டங்களினால் கடலிலும், தரையிலும் பல மாறுதல்கள் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக கொழும்புத் துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம், மற்றும் மொரஹககந்த நீர்வீழ்ச்சி, ஆகியவற்றின் அபிவிருத்திகளினால் இலங்கையின் கடற்கரையிலும் தரைப்பகுதியிலும் பல  மாறுதல்கள் ஏற்பட்டுள்ளது.

இத்துடன் கடந்த ஐந்து வருட காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அதிவேக நெடுஞ்சாலை புனரமைப்புகளும் இந்த புதிய வரைபடத்தில் இடம்பெற்றுள்ளன.

செயற்கைக்கோள் படங்கள் உதவியுடன் இந்த புதிய வரைபடத்தை நில அளவைத் திணைக்களம் தயாரித்துள்ளது. முன்னர் தயாரித்த வரைபடத்துக்கு வான்வழி புகைப்படங்கள் பெறப்பட்டிருந்தது. தற்போதைய வரைபடத்துக்கு மிகவும் துல்லியமான செயற்கைக்கோள் படங்களை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த புதிய வரைபடம்  இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும்" என தெரிவித்துள்ளார்.