பொட்டு அம்மான் உயிருடன் இல்லை என மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன

விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையின் பொறுப்பாளர் பொட்டு அம்மான் உயிருடன் இல்லை என மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.பொட்டு அம்மான் உயிருடன் இருப்பதாகவும், அவர் நோர்வே நாட்டில் வசித்து வருவதாகவும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார்.

2009ஆம் ஆண்டு மே மாதம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டது. இதன்போது புலிகள் இயக்கத்தின் தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.

இறுதிக்கட்டப் போரில் நந்திக்கடல் பகுதியில் ஏராளமான சடலங்கள் புதைந்து கிடந்தன. இவற்றில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர்கள் பலரின் சடலங்களும் உள்ளதாக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

அதேபோன்று நந்திக்கடல் பரந்த பிரதேசமாகும். இறுதிக்கட்டப் போரில் பல உடல் நீருக்குள்ளும், சேற்றுக்குள்ளும் புதைந்து கிடந்தன.

அவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் உயிரற்ற உடலும் மீட்கப்பட்டது. இறுதிக் கட்ட நந்திக்கடல் போரில் எந்தவொரு தலைவரும் தப்பிக்க வாய்ப்பில்லை.

விடுதலை புலிகள் இயக்கத்தின் கிழக்கு தளபதியாக செயற்பட்ட கருணா அரசியல் பிரவேசத்துக்கு வந்ததன் பின்னர் போலியான பிரச்சாரங்களை செய்து வருகின்றார். இது அவரது அரசியல் நோக்கத்தினை மையப்படுத்தியதாகவே காணப்படுகின்றது.

அவ்வாறு பொட்டு அம்மான் உயிருடன் இருப்பாராயின் எட்டு வருடங்கள் தலைமறைவாகி இருக்க வேண்டிய தேவை கிடையாது.

அரசியல் நோக்கங்களுக்காகவும் நாட்டில் அநாவசியமாக குழப்பங்களை ஏற்படுத்தும் நோக்கிலேயும் இவ்வாறான பேச்சுக்களை கருணா கூறி வருகின்றார்.

53ஆவது படையணியின் கட்டளை அதிகாரியாக நான் விளங்கினேன். நாம் நந்திக்கடலில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப்போரை மும்முரமாக முன்னெடுத்தோம். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் உயிரற்ற உடலை கைப்பற்றியதும் எனது படையணியே ஆகும்.

ஆகவே புலிகளின் புலனாய்வுத் துறையின் பொறுப்பாளர் பொட்டு அம்மான் உயிருடன் இருக்கின்றார் என்ற கருத்து முற்றிலும் பொய்யாகும்.

விடுதலைப் புலிகள் சம்பந்தமாக கிடைக்கப் பெற்ற அனைத்து புலனாய்வுத் தகவல்களும் அதனை உறுதிப்படுத்தியுள்ளதாக மேஜர் ஜெனரல் தெரிவித்தார்.