நான் உன்ன நம்பித்தானே இங்கே வந்தேன்… இவங்ககூட இருக்கவா வந்தேன்?” என அரை நிர்வாணக் கோலத்தில் இளம் பெண்ணின் கதறல் கேள்வி!

“டேய்… நான் உன்ன நம்பித்தானே இங்கே வந்தேன்… இவங்ககூட இருக்கவா வந்தேன்?” என அரை நிர்வாணக் கோலத்தில் கட்டிலில் உட்கார வைக்கப்பட்டிருக்கும் இளம் பெண்ணின் கதறல் கேள்வி, அந்த வீடியோவைப் பார்க்க நேரிடும் எவரையும் குலைநடுங்க வைத்துவிடும்.

காதல் வலை வீசி, அந்தப் பெண்ணை அழைத்துவந்த சபரிராஜன் என்கிற ரிஸ்வந்த், தன் முதுகுக்குப் பின்னால் ரகசியமாய் செல்போனில் படம் எடுத்துக்கொண்டிருக்கும் நண்பர்களை சைகைமூலம் அழைக்கிறான். அந்த இளம்பெண் கையெடுத்துக் கும்பிட்டு… “என்னைய விட்ரு…’ என கதறும்போதே, சபரிராஜனின் நண்பனான திருநாவுக்கரசு டீம் நுழைகிறது. தலையிலடித்துக்கொண்டு அழுகிறார் அந்த இளம்பெண்.

அதற்கடுத்த வீடியோவில் லெக்கின்ஸ் பேன்ட்டோடு இருக்கும் அந்த இளம்பெண், “அண்ணா பெல்ட்டால அடிக்காதீங்க அண்ணா… நான் கழட்டிடுறேன்” எனத் துடிதுடித்தபடி அழுவது இதயத்தை இரு துண்டாக்குகிறது.

“இந்த வீடியோக்கள் வெறும் சாம்பிள்தான். நெறைய வீடியோஸ் போலீஸ்கிட்ட இருக்கு. இவனுக நெறைய பொண்ணுகளை இப்படித் துன்புறுத்தியிருக்கானுங்க. அதுல முக்கியமானவன் திருநாவுக்கரசு” என கோவை -பொள்ளாச்சியை சேர்ந்த ஓர் இளம்பெண் நம்மிடம் கதறியபடியே சொன்னார்.

பொள்ளாச்சி கிழக்கு காவல்நிலையத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரியிடம் பேசினோம். “”மொத்தம் ஆயிரத்து நூறு வீடியோக்கள். ஏராளமான போட்டோக்கள். எல்லாம் கிராமத்துலயிருந்து இங்கே பொள்ளாச்சி டவுனுக்கு படிக்க வர்ற பொண்ணுக. கடைகள்ல வேலை செய்யற பொண்ணுகளையெல்லாம் காதல்ங்கற பேர்ல நம்பவச்சு கோட்டூர்புரம் பகுதியில இருக்கற சின்னப்பம்பாளையம் பண்ணை வீட்டுக்கு கூட்டிட்டுப் போயி பத்துக்கும் மேற்பட்ட பசங்க பண்ணுன அக்கிரமம்தான் வீடியோவா பதிவாகியிருக்கு. பண்ணை வீட்டுப் பையன் திருநாவுக்கரசுதான் கேங் லீடர். கந்துவட்டி பிஸினஸ். அவன் அப்பா த.மா.கா.காரர்.

திருநாவுக்கரசு கூடவே சுத்துற சுபாகர், பிரேம், கெரோன், பைக் பாபு, சதீஷ், வசந்தகுமார், பாபு, செந்தில், ஆச்சிபட்டி மணிகண்டன் இவனுக எல்லாருமே ஸ்கூல், காலேஜ்னு போய் நின்னுக்குவானுக. எதிர்ப்படுற பொண்ணுககிட்டபோய் பேசி நம்பர் வாங்கிருவானுக. அப்புறம், அந்த நம்பர்கள்ல பேசுறது திருநாவுக்கரசுதான். பேசியே மயக்கி சம்பந்தப்பட்டவனுகளிடம் திரும்ப போனை கொடுத்துருவான்.

அடுத்தநாள் அவனவன் ரெடி பண்ணின பொண்ணுகளை கூட்டிட்டு சின்னப்பம்பாளைய பண்ணை வீட்டுக்கு வந்துருவானுக. அங்கே காதல் மயக்கத்தில் உள்ள பெண்களை அலங்கோல உடையில் ரகசியமா வீடியோ எடுத்துருவான் இந்த திருநாவுக்கரசு. அப்புறம் அவனும் அவனோட கேங்க்கும் உள்ளே நுழைஞ்சி பொண்ணுங்களை கதறக் கதற நாசப்படுத்தி, வீடியோ எடுத்திடுவானுங்க. அதை வெளியிட்டுடுவோம்னு மிரட்டி மிரட்டியே, நினைச்சப்பவெல்லாம் பண்ணை வீட்டுக்கு கூட்டிட்டு வந்திடுவானுங்க. இவனுங்க எடுத்த வீடியோக்களை “பார்’ நாகராஜ்ங்கிற அ.தி.மு.க. ஆளுகிட்ட காட்டி இருக்கானுக. அவனும் இந்த திருநாவுக்கரசு, ரிஷ்வந்த்தோடு சேர்ந்து, பொண்ணுகளை நாசமாக்கி, அ.தி.மு.க. கட்சி மேல்மட்ட நிர்வாகிகளுக்கும் சப்ளை பண்ணியிருக்கான்”’என்றார் விரிவாக.

“எப்படி மாட்டினார்கள்’ எனக் கேட்டோம். “பொள்ளாச்சியைச் சேர்ந்த அகிலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கிற கல்லூரி மாணவி, இந்த ரிஷ்வந்தின் காதல் வலையில் சிக்க, அகிலாவை குறிப்பிட்ட இடத்திற்கு வரச்சொல்லி… காரில், தன் சகாக்களோடு காத்திருந்தான். அகிலா காரில் ஏறியதும், அவரிடம் சில்மிஷம் செய்து, தன் செல்போனில் ரிஷ்வந்த் படம் பிடிக்க, அலறித் திமிறிய அகிலாவோட செயினை அறுத்துட்டு, காரிலிருந்து இறக்கி விட்டுட்டானுங்க. அந்தப் பொண்ணு கொடுத்த கம்ப்ளைண்ட்டில்தான் இவனுகளை அரெஸ்ட் பண்ணினோம். அப்ப திருநாவுக்கரசு தப்பித்துவிட்டான். பொள்ளாச்சி மக்கள் எல்லோரும் போராட ஆரம்பிச்சுட்டாங்க. தி.மு.க.காரங்க சாலைமறியலே பண்ணினாங்க. அதுக்கப்புறம் திருநாவுக்கரசே சரணடையறதா வீடியோ அனுப்பினான், அவனையும் அரெஸ்ட் பண்ணியாச்சி. தொடர்ந்து விசாரிச்சா இன்னும் என்னென்ன பயங்கரம் வெளியே தெரியுமோ” என்கிறார் போலீஸ் அதிகாரி.

இளம்பெண்கள் பிரச்சினையை தீவிரமாக எடுத்துப் போராடிவரும் தி.மு.க. இளைஞர் அணி நவநீதகிருஷ்ணன், அ.தி.மு.க.வைச் சேர்ந்த “பார்’ நாகராஜ் மீது வழக்குப்பதிவு செய்து அரெஸ்ட் பண்ணின அன்னைக்கு சாயந்தரமே சென்னையில இருந்து பிளைட் பிடித்து ஒரு வக்கீல் வருகிறார். அவரும் ஜாமீனில் விடுவிக்கப்படுகிறார். இங்கே உள்ள அ.தி.மு.க. பிரமுகர்கள் பலரும் இந்த இளம் பெண்களை சீரழிச்சிருக்காங்க. திருநாவுக்கரசு, மா.செ. பொள்ளாச்சி ஜெயராமன் தரப்புக்கு வேண்டியவர். அவரும், பொள்ளாச்சி நகராட்சி தலைவரா இருந்த கிருஷ்ணகுமாரும் குற்றவாளிகளை தப்பவிடப் பாக்குறாங்க. புகார் கொடுத்த பெண்ணின் உறவினர்களை ஒரு கும்பல்… கேஸை வாபஸ் வாங்கச் சொல்லி மிரட்டியிருக்கிறது. முழுமையான பின்னணி தெரியும்வரை நாங்க போராடுவோம்” என்கிறார் ஆத்திரமாய்.

பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. எம்.பியான மகேந்திரனும் “இந்த அகிலா வழக்கில் மறைந்திருக்கும் குற்றவாளிகள் கண்டறியப்பட வேண்டும்’ என தன் கருத்தை வெளியிட்டிருக்கும் நிலையில்… அனைத்திந்திய மாதர் சங்கம் ராதிகா, கொங்கு நாடு கட்சி ஈஸ்வரன் ஆகியோரும் இதே கருத்தை வலியுறுத்தி போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ஆளுந்தரப்பு பிரமுகர்கள் பலரது பெயரும் இந்த விவகாரத்தில் அடிபடுவதால், முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு பலிகடா ஆக்கப்படலாம் என்ற செய்தியும் காவல்துறை வட்டாரத்திலிருந்தே கசிகிறது.