2012ல் இருந்தே நடந்தது.. 7 வருடமாக பொள்ளாச்சி கும்பல் சிக்காமல் இருந்தது எப்படி?

பொள்ளாச்சியில் பாலியல் கொடூரங்களை நடத்தி வந்த கும்பல் கடந்த 7 வருடங்களாக எந்த இடையூறும் இன்றி யாரிடமும் மாட்டாமல் பெண்களை ஏமாற்றி வந்தது தெரிய வந்து இருக்கிறது.

பொள்ளாச்சி பாலியல் குற்றங்கள் தொடர்பான விவரங்கள் தற்போது வெளியே வர தொடங்கி உள்ளது. நேற்று வெளியான வீடியோ காரணமாக பொள்ளாச்சி பாலியல் வழக்கு விஸ்வரூபம் எடுத்து உள்ளது.

மொத்தம் 253க்கும் அதிகமான பெண்கள் இது போல பாலியல் துன்பத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள். இது தொடர்பாக இதுவரை 1500க்கும் அதிகமான வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த கொடூரம் தொடங்கியது 2012ல்தான். இந்த கொடூரத்தை ஆரம்பித்த போது அந்த குழுவில் திருநாவுக்கரசு உட்பட சிலர் மட்டுமே இருந்திருக்கிறார்கள். அப்போது அவர்களுக்கு வயது 20க்கும் குறைவாகவே இருந்ததாக தகவல்கள் வருகிறது.

அதன்பின் இவர்களுடன் இன்னும் சிலர் சேர்ந்து இருக்கிறார்கள். இந்த குழுவில் தற்போது 20க்கும் மேற்பட்ட நபர்கள் இருக்கிறார்கள். திருநாவுக்கரசுதான் இந்த குழுவை வழி நடத்தி இருக்கிறார். ஆனால் இந்த 20 பேர் என்பது வெளியில் தெரிந்த விஷயம். தெரியாமல் இதில் பல நபர்கள் பின்னாடி இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

இதன் பின் பல ஆட்கள் இருக்கிறார்கள் என்று, திருநாவுக்கரசு வெளியிட்ட ஆடியோவில் குறிப்பிட்டு இருக்கிறார். எங்களுக்கு பின் பலர் இருக்கிறார்கள் என்றும் திருநாவுக்கரசு குறிப்பிட்டு இருக்கிறார். இவர்களின் உதவியுடன்தான் இந்த குழு இத்தனை வருடங்கள் இந்த கொடூரத்தை செய்து வந்து இருப்பதாக தகவல்கள் வருகிறது.

இவர்கள் பெண்களை மிரட்டி பணம் வாங்கியது மட்டுமில்லாமல், அவர்களை சில முக்கியஸ்தர்களுக்கும் அனுப்பி வைத்து இருக்கிறார்கள். பல முக்கியஸ்தர்கள், தலைகள் இதற்கு பின் இருப்பதாக தகவல்கள் வருகிறது. இதை வைத்துதான், இந்த செல்வாக்கை வைத்துதான் இத்தனை வருடங்கள் இவர்கள் யாரிடமும் சிக்காமல் சுற்றி இருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

அதேபோல் திருநாவுக்கரசு குழு இதற்கு முன்பே சில முறை மாட்டி இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்களின் உறவினர்கள் சிலரிடம் மாட்டி இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் மீது அப்போதெல்லாம் வழக்கு பதியப்படாமல், வெறும் பேச்சுவார்த்தை செய்து பிரச்சனையை தீர்த்து இருப்பதாகவும் தகவல்கள் வருகிறது. இது தொடர்பாக வரிசையாக நிறைய உண்மைகள் வெளியாகிக் கொண்டு உள்ளது. இதை எல்லாம் முறையாக விசாரிக்க வேண்டும் என்பதே மக்களின் ஒரே வேண்டுகோள்.