இந்தியாவின் ASAT சோதனையால் விண்ணில் 400 சிதைகூளங்ககள்

இந்தியாவின் விண்வெளி ஏவுகணை சோதனைக்கு நாசா ஈர்க்கவில்லை; சர்வதேச விண்வெளி நிலையம் ஆபத்தில் உள்ளது என NASA தெரிவித்துள்ளது!!

செயற்கைக் கோளை தாக்கி அழித்த, இந்தியாவின் ASAT சோதனையால் விண்ணில் சிதைகூளங்களாக 400 துண்டுகள் மிதப்பதாகவும், அது சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கும் அதில் உள்ள விண்வெளி வீரர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என்றும் நாசா கூறியுள்ளது.

சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் மற்றும் செயற்கைக்கோள்களுடன் மோதக்கூடிய அபாயம் உள்ளதா என்பதைக் கணிப்பதற்காக, விண்வெளியில் 10 சென்டிமீட்டருக்கும் அதிகமாக உள்ள 23 ஆயிரம் துண்டுகளை அமெரிக்க ராணுவம் கண்காணித்து வருகிறது. இதில் 10 ஆயிரம் துண்டுகள் விண்வெளி சிதைகூளங்களாகும். அதில் 3 ஆயிரம் துண்டுகள் 2007ஆம் ஆண்டில் சீனா நடத்திய ஏசாட் சோதனையால் உருவானவையாகும். 

இந்நிலையில், விண்ணில் செயற்கைக்கோளை தாக்கி அழித்த இந்தியாவின் ASAT சோதனையால் உருவான சிதைகூளங்கள் 400 துண்டுகளாக விண்வெளியில் மிதப்பதாக, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் தலைவர் ஜிம் பிரிடென்ஸ்டைன் (Jim Bridenstine) கூறியுள்ளார்.

ASAT சோதனையின் போது, 300 கிலோமீட்டர் உயரத்தில் இருந்த செயற்கைக்கோள் தாக்கி அழிக்கப்பட்டது. இதைவிட அதிக உயரத்தில் அமைந்த சுற்றுவட்டப் பாதையில்தான், சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் மற்றும் பெரும்பாலான செயற்கைக்கோள்கள் சுற்றிவருகின்றன. இருப்பினும், ஏசாட் சோதனையால் உருவான சிதைகூளங்களில் 24 துண்டுகள் சர்வதேச விண்வெளி ஆய்வுமையம் சுற்றிவரும் பாதையின் உயரத்திற்கு மேலே செல்வதாக பிரிடைன்ஸ்டைன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த துண்டுகளில் பெரும்பாலானவை, அவற்றின் போக்கை கண்காணிக்கும் வகையில் பெரியதாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 10 சென்டிமீட்டர் மற்றும் அதற்கும் அதிகமான அளவுள்ள துண்டுகளை மட்டுமே கண்காணிக்க முடியும் என்றும், ஏசாட் சோதனையால் உருவான அப்படிப்பட்ட 60 துண்டுகளை கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு விண்வெளி ஆய்வுமைய சுற்றுப்பாதையில் குறுக்கிடும் வகையில், விண்வெளியில் சிதைகூளங்களை உருவாக்குவது பயங்கரமான விஷயம் என்றும், எதிர்காலத்தில் மனிதர்களுடன் விண்கலங்களை அனுப்பும் திட்டங்களுக்கு உகந்த நடவடிக்கை அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இந்தியா நடத்திய ஏசாட் சோதனையால், அடுத்த 10 நாட்களில் சிதைகூளங்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தின் மீது மோதக்கூடிய அபாயம் 44 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும் பிரைடன்ஸ்டெய்ன் கூறியுள்ளார். இருப்பினும் நாட்கள் செல்லச் செல்ல சிதைகூளங்கள் வளிமண்டலத்திற்குள் கீழிறங்கி எரிந்து சாம்பலாகிவிடும் என்பதால், அபாயம் படிப்படியாக மறைந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.