பூ விற்கும் பெண்ணின் கோபம் - "பிளாஸ்டிக்கிற்கு பதிலாக டாஸ்மாக்கை ஒழித்திருக்கலாம்"

கோப்புப்படம் 

"500 ரூபாய் தாள்கள் எல்லாம் இனி செல்லாது என்று அறிவித்த பிறகு, எங்கள் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள். அப்போது உணவுக்கு கூட வழியில்லாமல் போனது. அக்கம்பக்கத்தில் கடன் வாங்கிதான் வாழ்க்கையை ஓட்டினோம். சாப்பாட்டுக்கு ரேஷன் அரிசிதான். இப்போது வரை அப்படிதான் உள்ளது. வாங்கிய கடனை கஷ்டப்பட்டு திருப்பிக் கொடுத்தோம்" என்கிறார் மதுரை மாட்டுத் தாவணி பூ மார்க்கெட்டில் பூ விற்கும் பஞ்சு.

மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், கடந்த 5 ஆண்டுகால மத்திய அரசின் ஆட்சியைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள், வரப்போகும் புதிய பிரதமரிடம் மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது குறித்து தெரிந்து கொள்ள, நாம் தமிழகத்தின் சில இடங்களுக்கு பயணித்தோம்.

மதுரை என்றாலே நம் நினைவுக்கு வருவது பூக்கள்தான். ரோஜா, முல்லை, மல்லி என்று அனைத்துப் பூக்களையும் மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் காணமுடிந்தது. பல வெளிநாட்டவர்களும் அங்கு வந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்ததையும் நாம் பார்த்தோம்.

மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்
மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்

அங்கு பூ விற்கும் சில பெண்களை நாம் சந்தித்து பேசினோம். வெயில் சுட்டுக் கொண்டிருக்க, அதனை துளியும் பொருட்படுத்தாது அவர்கள் தங்கள் வியாபாரத்தை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அங்கிருக்கும் ஒவ்வொருக்கும் சொல்வதற்கு ஏதோ ஒரு விஷயம் இருந்தது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை, டாஸ்மாக் பிரச்சனை, பிளாஸ்டிக் தடை என்று மத்திய மாநில அரசுகளின் ஒவ்வொரு நடவடிக்கையும், இவர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது நலிந்து போன தங்கள் வியாபாரத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கு இரண்டு ஆண்டுகள் எடுத்ததாக அவர்கள் கூறுகின்றனர். மேலும், விலைவாசியை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அடுத்து வரும் அரசுக்கு அப்பெண்கள் வைக்கும் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

"காலை 5 மணிக்கெல்லாம் பூ வாங்க வந்துவிடுவேன். இங்கு வெயிலில் பூ விற்றுதான், என் பிள்ளைகளை படிக்க வைக்கிறேன். என் பிள்ளைகள் அரசுப் பள்ளியில் படிக்கிறார்கள்" என்கிறார் மணிமேகலை. "பூ விற்றால் ஒரு நாளைக்கு 200 ரூபாய் கிடைக்கும், காசு போதவில்லை என்றால் இரண்டு கிலோ பூ கட்டுவேன்" என்று கூறுகிறார் பஞ்சு.

அவர் அரசிடம் ஒன்றை கேட்டுக் கொள்ள விரும்புவதாக நம்மிடம் தெரிவித்தார். என்னவென்று கேட்டோம்.

"என் கணவரின் மதுப்பழக்கத்தால்தான் நான் இப்படி பூ விற்றுக் கொண்டிருக்கிறேன். டாஸ்மாக்கால் எங்கள் குடும்பம் சீரழிந்துவிட்டது. என் கணவர் சரியாக இருந்தால், எங்களுக்கு இவ்வளவு கஷ்டம் இருக்காது. ஏதோ பிளாஸ்டிக்கை எல்லாம் அரசு ஒழிக்கிறது, தடை செய்கிறது. அதற்கு பதிலாக முதலில் டாஸ்மாக்கை ஒழிக்கலாம்" என்றார் அவர்.

பொன்னம்மாள்
பொன்னம்மாள்

அருகில் தனது கணவருடன் பூ விற்றுக் கொண்டிருந்த பொன்னம்மாள் நம்மிடம் பேசுகையில், சில நாட்கள் நல்ல வியாபாரம் இருக்கும், சில நாட்கள் வியாபாரமே இருக்காது என்றார்.

"ஒரு நாளைக்கு நல்ல காசு பாத்தா, அடுத்த நாள் கையில் எதுவுமே இருக்காது. தீபாவளி, பொங்கல் என்றால் நல்ல வியாபாரம் இருக்கும். மற்ற நாட்களில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஒன்றும் இருக்காது. இப்படிதான் நாங்கள் வாழ்கிறோம். கஷ்டப்பட்டு கடன் வாங்கிதான் என் இரு பிள்ளைகளையும் படிக்க வைத்தேன்" என்று அவர் கூறுகிறார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு, தான் பட்ட கஷ்டங்களையும் அவர் நம்மிடம் பகிர்ந்தார்.

"2000 ரூபாய் நோட்டுகளைதான் பார்க்க முடிகிறது. 500 ரூபாய் தாள்களை பார்க்கவே முடிவதில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு இங்கு பூ விற்கும் தொழில் செய்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டோம். அதனை விவரிக்க கூட முடியாது" என்று கூறுகிறார் பொன்னம்மாள்.

பெருச்சி
பெருச்சி

பிளாஸ்டிக் கவர்களை தமிழக அரசு ஒழித்ததால் நஷ்டம் ஏற்பட்டது என்று சிலர் அங்கு குற்றஞ்சாட்டினாலும், இது நல்லதற்காகதான் என்று தான் நினைப்பதாக கூறுகிறார் அங்கு தன் பூக்கடையை அமைத்துக் கொண்டிருந்த பெருச்சி.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்னர் சில்லறை வர்த்தகம் செய்யும் எங்களைப் பற்றி அரசு சற்று சிந்தித்து இருக்கலாம் என்று கூறும் பூ விற்கும் பெண்கள், அதில் இருந்து மீண்டு வர தாங்கள் பட்ட துயரங்கள் ஏராளம் என்கின்றனர்.