கொசுக்களால் வரும் ஆபத்து - மதுபானம் குடிப்பவர்களுக்கு

மதுபானம் குடிப்பவரை கொசுக்கள் அதிகம் கடிப்பது ஏன்?

ஒரு புகைப்பட கலைஞரான நான் சில ஆண்டுகளுக்கு முன்னர், டென்மார்க்கில் நடைபெற்ற கார் கண்காட்சி ஒன்றில் கலந்து கொண்டேன்.

அந்நாட்டிலுள்ள மோன் என்னும் தீவில் நடைபெற்ற கண்காட்சி முடிவடைந்தவுடன், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், சில கோப்பை மதுபானம் என நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது. அன்றைய இரவை சாய்வு நாற்காலி ஒன்றில் படுத்துக்கொண்டு பொதுவெளியிலேயே கழிப்பது என்று முடிவெடுத்தேன்.

மறுநாள் காலையில் எனக்கு மூன்று புதிய படிப்பினைகள் கிடைத்தன.

  • கோடைக்காலத்தில் டென்மார்க்கில் மிக அதிகளவிலான கொசுக்கள் இருக்கும்.
  • கொசுக்களால் சாய்வு நாற்காலியின் அமைப்பையும், நமது சட்டையையும் மீறி கடிக்க முடியும்.
  • நாம் மதுபானம் குடித்துவிட்டு தூங்குவது என்பது, கொசுக்களுக்கு இரவு உணவுக்கான அழைப்பை விடுத்துவிட்டு தூங்குவதற்கு சமம்.

ஆம், அந்த ஒரே இரவில் கொசுக்கள் என்னுடைய முதுகை பதம்பார்த்து விட்டன. இதுபோன்ற அனுபவத்தை நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

மதுபானத்திற்கும், கொசு கடிப்பதற்கும் ஏதாவது தொடர்புள்ளதா என்று தேடிப்பார்த்தபோது, அதுதொடர்பாக கடந்த 2002ஆம் ஆண்டு அமெரிக்கா கொசு கட்டுப்பாட்டு சங்கத்தின் சஞ்சிகையில் கட்டுரை உள்ளது குறித்து தெரியவந்தது.

ஒருவர் மதுபானம் குடித்திருந்தால் அவர் கொசு கடிகளுக்கு உள்ளாவது ஒப்பீட்டளவில் மிகவும் அதிகமாக இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மதுபானம் குடிப்பவரை கொசுக்கள் அதிகம் கடிப்பது ஏன்?

ஆனால், மதுபானம் குடித்திருப்பவர்களை மட்டும் கொசுக்களால் எப்படி கண்டறிய முடிகிறது என்ற கேள்விக்கு பலராலும் தெளிவுற பதிலளிக்க முடியவில்லை.

மனிதர்கள் மூச்சு விடும்போது வெளியிடும் கார்பன்-டை-ஆக்சைடு மற்றும் ஆக்டோனால் ஆகியவற்றை முதலாக கொண்டே கொசுக்கள் ஒருவரை கண்டறிந்து கடிக்கிறது என்பது நமக்கு தெரிந்ததே.

மேற்கண்ட கேள்விக்கான பதில் நம்மை சமாதானப்படுத்தாத நிலையில், மதுபானம் குடித்திருந்த ஒருவரை கடிப்பதால் கொசுவின் செயல்பாட்டில் ஏதாவது மாற்றம் இருக்குமா? என்ற மற்றொரு கேள்வியும் எழுகிறது.

இதுகுறித்து பேசிய அமெரிக்காவின் பிலடெல்பியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் தான்யா டாப்கே, " மதுபானம் குடித்திருந்த ஒருவரை கடிப்பதால் கொசுவின் செயல்பாட்டில் எவ்வித மாற்றமும் இருக்காது என்றுதான் நான் நினைக்கிறேன். ஏனெனில் மதுபானம் குடித்தவரின் ரத்தத்தில் மதுபானத்தின் சதவீதம் மிகவும் குறைவாகவே இருக்கும். அந்த நபரின் ரத்தத்தை குடிக்கும் கொசுவுக்கு குறிப்பிடத்தக்க அளவில் எவ்வித பாதிப்பும் இருக்காது என்றே நான் நினைக்கிறேன்" என்று அவர் கூறுகிறார்.

இதே கேள்விக்கு விடையளிக்கும் வகையில், பாப்புலர் சயின்ஸ் என்னும் இதழில் அமெரிக்காவின் வடகரோலினா பல்கலைக்கழகத்தை சேர்ந்த பூச்சியியல் துறை பேராசிரியர் கோபி ஸ்சால் எழுதிய கட்டுரையில், "சுமார் 10 கோப்பை அளவு மதுபானத்தை குடித்த ஒருவரது இரத்தத்தில் 0.2 சதவீதம் அளவிற்கு மதுபானம் இருக்கும். ஆனால், அந்த நபரது ரத்தத்தை குடிக்கும் கொசுவுக்கு அதனால் எவ்வித மாற்றமும் ஏற்படுவதில்லை" என்று கூறுகிறார்.

மதுபானம் குடிப்பவரை கொசுக்கள் அதிகம் கடிப்பது ஏன்?

துளியளவு மதுபானம் கொசுவின் செயல்பாட்டில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாதற்கு அதன் பரிணாம வளர்ச்சி காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஏனெனில், ரத்தத்தை தவிர்த்து ஏதாவது திரவத்தை கொசு குடிக்கும் பட்சத்தில், அது நேரடியாக அதன் செரிமான மண்டலத்துக்கு சென்று நொதித்தல் வினைக்கு உட்படுவதால், திரவங்கள் பூச்சியின் மத்திய நரம்பு மண்டலத்தை அடைவதில்லை என்று கருதப்படுகிறது.

"கொசுக்கள் மட்டுமின்றி அனைத்து விதமான பூச்சிகளும் குடிக்கும் சாறுகள் நேரடியாக அதன் உடல் முழுவதும் பரவுவதில்லை. பூச்சிகளின் செரிமான மண்டலத்தில் நடைபெறும் நொதித்தல் நிகழ்வின்போது மதுபானம், பாக்டீரியா உள்ளிட்ட தீமை விளைவிப்பவை தனியே வெளியேற்றப்படுகிறது" என்று கூறுகிறார் லண்டனிலுள்ள நேச்சுரல் ஹிஸ்டோரி மியூசியத்தின் மூத்த அதிகாரியான எரிக்கா மெக்அலிஸ்டர்.

"மது அருந்தியவரை கடிப்பதால் கொசுவின் செயல்பாட்டில் ஏதாவது மாற்றம் ஏற்படுகிறதா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், பழ ஈக்களில் வெளிப்படையாக மாற்றத்தை காண முடிகிறது. எனினும், அதிகளவு சகிப்புத்தன்மையை கொண்டிருக்கும் பழ வண்டுகள், மதுபானம் கலந்த திரவத்தை குடித்தவுடன், மிகுந்த உற்சாகத்தை அடைகின்றன" என்று அவர் மேலும் கூறுகிறார்.

மதுபானத்தை தவிர்த்து 'ஏ' இரத்த வகையை கொண்டிருப்பவரைவிட, 'ஓ' இரத்த வகை கொண்டிருப்பவர் கொசுக்களால் கடிபடுவதற்கு இரண்டு மடங்கு அதிக வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி, அதிக உடல் வெப்பத்தை கொண்டிருப்பவர், கர்ப்பமாக உள்ளவர், அதிகளவு கார்பன்-டை-ஆக்சைடை வெளியிடுபவர் ஆகியோரை கொசு அதிகளவில் கடிப்பதற்கு வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.