கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கனவை சிதைத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீபக் சஹர்

சஹர்

ஐ.பி.எல்-12 போட்டி தொடங்கியதில் இருந்தே புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருந்துவந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றிப் பயணத்தை தமது சொந்த மண்ணில் அபாரமாக தடுத்து நிறுத்தியது சென்னை சூப்பர் கிங்க்ஸ்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் நடந்த முந்தைய போட்டியில் கட்டுப்பாடு இல்லாமல் பந்து வீசியதால் தமது அணித் தலைவர் மகேந்திர சிங் தோனியிடம் திட்டு வாங்கிய தீபக் சஹர் இந்தப் போட்டியில் வெறும் 20 ரன்களே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், ஒரு கேட்சும் பிடித்து ஆட்ட நாயகன் விருதினைத் தட்டிச் சென்றார். முந்தைய போட்டியில் திட்டிய தோனி இந்தப் போட்டியில் கைத்தட்டிப் பாராட்டினார் என்பதை சொல்லவும் வேண்டுமா?

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸை முதலில் பேட் செய்யப் பணித்தது.

முதல் ஓவரிலேயே கொல்கத்தாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சஹர் வீசிய அந்த ஓவரின் கடைசி பந்தில் கொல்கத்தா பேட்ஸ்மேன் கிறிஸ் லின் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டானார்.

இரண்டாவது ஓவரை ஹர்பஜன் சிங்கிடம் தந்தார் தோனி. அவரது சுழலில் சிக்கிய சுனில் நரைன் தீபக் சஹரிடம் பிடிபட்டு அவுட்டானார். அப்போது அவர் எடுத்திருந்தது 6 ரன்கள்தான்.

இரண்டு ஓவர் முடிவில் கொல்கத்தா அணியின் ஸ்கோர் எட்டு ரன்களுக்கு 2 விக்கெட். மீண்டும் அடுத்த ஓவர் வீசவந்த சஹர் ரன் ஏதும் எடுக்காமல் இருந்த நிதிஷ் ராணா-வை போல்டாக்கினார். இதன் பிறகு கொல்கத்தா வீரர்கள் சஹர் பந்தை கவனமாக ஆடத் தொடங்கினார்கள். எனினும், 11 ரன்கள் எடுத்திருந்த ராபின் உத்தப்பா கேதார் ஜாதவிடம் பிடிபட்டு அவுட்டானார்.

தோனி.

ஒரு கட்டத்தில் கொல்கத்தா 29 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து தவித்துக்கொண்டிருந்தது. இதில் மூன்று விக்கெட்டுகளை சஹர் எடுத்திருந்தார். இப்படி கொல்கத்தா விக்கெட்டுகள் சடசடவென வீழ்ந்தாலும், அந்த அணியின் ஆன்ட்ரே ரஸ்ஸல் இறுதி வரை அவுட்டாகாமல் 50 ரன்கள் எடுத்தார்.

இதுவும் இல்லாமல் இருந்திருந்தால் கொல்கத்தா அணியால் ஆட்ட நேர இறுதியில் தாம் எடுத்த 9 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் என்ற ஸ்கோரைக்கூட எடுத்திருக்க முடியாது.

109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு பேட்டிங் செய்ய வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஏற்கெனவே, வெற்றி தங்கத் தாம்பாளத்தில் காத்துக்கொண்டிருந்தது.

டியு பிளெசிஸ் 43 (நாட் அவுட்), அம்பத்தி ராயுடு 21 ரன்கள் எடுத்தனர். 17.2 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் வெற்றிக் கனியை சாவகாசமாகப் பறித்ததோடு புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு வந்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், தீபக் சஹர் எடுத்த 3 விக்கெட் தவிர, இம்ரான் தாஹிர் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்திருந்தனர்.

ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தீபக் சஹர் ஏற்கெனவே இந்திய அணிக்காக ஒரு நாள் போட்டியில் ஒரு முறையும், டி20 போட்டியில் ஒரு முறையும் விளையாடியிருக்கிறார்.