சென்னை ஆடுகளம் குறித்து டோனி மீண்டும் அதிருப்தி! - என்ன ஆடுகளம் இது?

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg (668×382)

சென்னை சேப்பாக்கம் மைதானம் குறித்து சி.எஸ்.கே அணித்தலைவர் டோனி மீண்டும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

சேப்பாக்கத்தில் நேற்று நடந்த ஐ.பி.எல் லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது.

முதலில் ஆடிய கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்புக்கு 108 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஆந்த்ரே ரஸல் 44 பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்தார்.

பின்னர் ஆடிய சென்னை அணி 17.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 111 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக டூபிளிசிஸ் 43 ஓட்டங்கள் எடுத்தார்.

அதிரடியில் கலக்கி வந்த கொல்கத்தா அணி, நேற்றைய போட்டியில் 109 ஓட்டங்களே எடுத்ததும், சென்னை அணி 18வது ஓவரில் அந்த எளிய இலக்கை எட்டியதும் மீண்டும் சேப்பாக்கம் ஆடுகளம் குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.இந்நிலையில் சேப்பாக்கம் ஆடுகளம் குறித்து சென்னை அணித்தலைவர் டோனி கூறுகையில், ‘முதல் போட்டியில் இருந்த ஆடுகளம் போலவே இந்த ஆட்டத்திலும் இருந்தது.

பிட்ச் குறித்து புகார் கூறிக் கொண்டே நாங்கள் வெற்றி பெற்று விடுகிறோம். இதுபோன்ற பிட்சில் விளையாட நாங்கள் விரும்பவில்லை. ஏனென்றால் மிகவும் குறைந்த ஸ்கோர் தான் எடுக்க முடிகிறது.

எங்கள் துடுப்பாட்ட வீரர்களுக்கு இந்த ஆடுகளத்தில் ஓட்டங்கள் எடுப்பது கடினமாக இருக்கிறது. பனி பொழிவினால் 2வது பகுதி ஆட்டத்திற்கு ஆடுகளம் கொஞ்சம் பரவாயில்லை.

இது மாதிரியான ஆடுகளம் இல்லாமல் பேட்டிங்குக்கு சாதகமாக அமைந்தால், நாங்கள் சரியான அணி சேர்க்கையை சேர்த்தாக வேண்டும். என்னை பொறுத்தவரை திட்டமிடுதல் எதுவுமில்லை.

ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர் ஆகியோரை பற்றி எந்த பிரச்சனையும் இல்லை ஒட்டு மொத்தத்தில் பந்துவீச்சு துறை நன்றாக இருக்கிறது’ என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பெங்களூரு அணி தொடக்க ஆட்டத்தில் 70 ஓட்டங்களில் இதே மைதானத்தில் சுருண்டதும், சென்னை அணி அந்த இலக்கை எட்ட 18 ஓவர்கள் வரை எடுத்துக்கொண்டது.

அந்த விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியபோது டோனி ஆடுகளம் குறித்து அதிருப்தி தெரிவித்த நிலையில், தற்போது மீண்டும் அவரது கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.