கோபப்பட்ட தோனியும், கடைசி பந்து வெற்றியும் - சென்னை சூப்பர் கிங்ஸ்...

அம்பயருடன் வாக்குவாதம்: தோனி செய்தது சரியா?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குமிடையே நேற்று நடந்த ஆட்டத்தின் கடைசி ஓவரில் தோனி நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது சமூக வலைதளங்களில் விவாதத்திற்குள்ளாகியுள்ளது.

ஐபிஎல்லை பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் புதுப்புது சாதனைகள் படைக்கப்பட்டு வருகிறது. ஆனால், சில சமயங்களில் சர்ச்சைகளும் ஏற்படத்தான் செய்கிறது. அந்த வகையில், நேற்று சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்குக்கிடையே ராஜஸ்தானில் நடைபெற்ற போட்டியில் முன்னெப்போதுமில்லாத வகையில் ஒரு சம்பவம் நடைபெற்றது.

நேற்று நடந்த போட்டியில் சென்னை அணியின் கேப்டன் தோனியும் (58 ரன்கள்), அம்பதி ராயுடுவும் (57 ரன்கள்) பேட்டிங் கைக்கொடுக்க 152 ரன்கள் என்ற இலக்கை சிஎஸ்கே கடைசி பந்தில் எட்டி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆட்டத்தின் கடைசி பந்தில் நான்கு ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில், ராஜஸ்தான் அணியின் பென் ஸ்ட்ரோக்சின் பந்துவீச்சை எதிர்கொண்ட சென்னை வீரர் சாண்ட்னெர் அதை சிக்சர் ஆக்கி அணிக்கு திரிலிங் வெற்றியை பெற்று தந்தார்.

முன்னதாக, களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களின் முடிவில் ஏழு விக்கெட் இழப்புக்கு 151 ரன்களை எடுத்திருந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பென் ஸ்ட்ரோக்ஸ் 28 ரன்களையும், ஜோஸ் பட்லர் 23 ரன்களையும் எடுத்திருந்தார்.

அம்பயருடன் வாக்குவாதம்: தோனி செய்தது சரியா?

அதை தவிர்த்து ராஜஸ்தான் அணியின் மற்ற வீரர்களின் 20க்கும் குறைவான ரன்களில் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

பந்துவீச்சை பொறுத்தவரை, சென்னை அணியின் தீபக், ஷர்துல், ஜடேஜா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், சாண்ட்னெர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தார்.

அடுத்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஷேன் வாட்சன் ரன் ஏதும் எடுக்காமலும், டு பிளிசிஸ் 7 ரன்னிலும் பெவிலியன் திரும்பி மோசமான தொடக்கத்தை அளித்தனர்.

அதன் பிறகு களமிறங்கிய ரெய்னா (4), கேதர் ஜாதவ் (1) ஆகியோரும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இருப்பினும், அம்பதி ராயுடுவும் (57), தோனியும் (58) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்டதுடன் வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால், சென்னை அணியின் வெற்றியை பலரும் எதிர்பார்க்கவில்லை என்றே கூறலாம். ஏனெனில், 19 ஓவர்களின் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு அணியின் ஸ்கோர் 134 ரன்கள் மட்டுமே இருந்தது. அப்போது களத்தில் தோனியும், ஜடேஜாவும் இருந்தனர். அதாவது, கடைசி ஆறு பந்துகளில் சென்னை அணியின் வெற்றிக்கு 18 தேவைப்பட்டது.

மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ஆர்பரித்துக்கொண்டிருந்த அந்த வேளையில், ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரஹானே, வேகப்பந்து வீச்சாளர் பென் ஸ்ட்ரோக்ஸிடம் கடைசி ஓவரை ஒப்படைத்தார்.

பதற்றம் நிறைந்த கடைசி ஓவர்

ஸ்ட்ரோக்ஸ் தனது முதல் பந்தை புல் லெந்த்தாக வீச, அதை லாவகமாக தட்டிவிட்ட ஜடேஜா சிக்சர் ஆக்கினார். இருப்பினும், ஸ்ட்ரோக்ஸ் ஜடேஜா ஆகிய இருவருமே நிதானம் இழந்து கீழே விழுந்தனர்.

அம்பயருடன் வாக்குவாதம்: தோனி செய்தது சரியா?

ஸ்ட்ரோக்ஸின் இரண்டாவது பந்து நோபாலாக, அதில் ஒரு ரன் ஓடினார் ஜடேஜா. பிரீ-ஹிட்டான அடுத்த பந்தை சந்தித்த தோனியால் இரண்டு ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

மூன்றாவது பந்தில் ஜெய்ப்பூர் மைதானமே எதிர்பார்த்து கொண்டிருந்த ஒன்று நடந்தது. ஆம், சென்னை அணியின் கேப்டன் தோனி ஸ்ட்ரோக்ஸின் பந்துவீச்சில் கிளீன் போல்டானார்.

தோனி பெவிலியனுக்கு திரும்பியபோது, கடைசி 43 பந்துகளில் சென்னை அணி இரண்டு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்சர்களுடன் 58 ரன்கள் எடுத்திருந்தது.

தோனியின் விக்கெட்டை அடுத்து ரசிகர்கள் மட்டுமின்றி, ராஜஸ்தான் அணி வீரர்கள்கூட தங்களது வெற்றி நிச்சயம் என்றே நினைத்திருப்பார்கள். ஆனால், அடுத்து களமிறங்கிய சிஎஸ்கே அணியின் சாண்ட்னெர் நான்காவது பந்தில் சிரமப்பட்டு இரண்டு ரன்கள் எடுத்தார்.

இதைத்தொடர்ந்தே இந்த ஆட்டத்தின் முக்கியமான சம்பவம் நடந்தது. எதிர்கொண்ட பந்து முதலில் நோபாலாக அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் திரும்பப்பெறப்பட்டது.

அதைத்தொடர்ந்து, ஜடேஜாவும். சாண்டனெரும் இதுகுறித்து களத்தில் இருந்தார் நடுவர்களுடன் முறையிட்டு கொண்டிருக்க, பெவிலியனில் நின்றுகொண்டு ஆவேசமாக காணப்பட்ட தோனி, ஒரு கட்டத்தில் மைதானத்திற்குள் வந்து நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

எப்போதும் கூலாக இருப்பதால், 'கேப்டன் கூல்' என்று ரசிகர்களால் அழைக்கப்படும் தோனியின் இந்த செயலை எவரும் எதிர்பார்க்கவில்லை.

தோனி உள்பட சென்னை அணியின் வீரர்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிறகும், நடுவர்கள் அந்த பந்தை நோபாலாக அறிவிக்கவில்லை. அதிருப்தி அடைந்த தோனி மீண்டும் பெவிலியனுக்கு திரும்பினார்.

அடுத்ததாக ஐந்தாவது பந்தை எதிர்கொண்ட சாண்ட்னெர், பந்தை தூக்கி அடித்தாலும், அவரால் இரண்டு ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. அடுத்த பந்து ஒய்டானாதால் கூடுதலாக ஒரு ரன் கிடைத்தது.

அம்பயருடன் வாக்குவாதம்: தோனி செய்தது சரியா?

கடைசி பந்தில் மூன்று ரன்கள் அடித்தால் வெற்றி என்ற உச்சக்கட்ட பதற்றம் மைதானத்தை தொற்றியது.

மிகுந்த அமைதியான சூழல், போட்டியின் கடைசி பந்தை விளாசிய சாண்ட்னெர் சிக்சராக்கி மிகவும் திரில்லிங்கான போட்டியில் சென்னை அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.

சென்னை அணியின் திரில்லிங் வெற்றியைவிட, தோனியின் செயல்பாடே கடும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.

இதைத்தொடர்ந்து, இந்த போட்டியில் ஐபிஎல்லின் ஒழுங்கு விதிகளுக்கு மாறாக செயல்பட்ட சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு போட்டியின் ஊழியத்தில் 50 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக ஐபிஎல் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த முடிவை தோனி ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம், இதுவரை ஏழு போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி ஆறு வெற்றி, ஒரு தோல்வியுடன் 12 புள்ளிகளை பெற்று, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது.