பிரச்சாரத்தில் விஜயகாந்த் பேச்சு - ஸ்டாலினை நம்பி யாரும் வாக்களிக்க வேண்டாம்:

சென்னையில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்ட தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், தி.மு.க தலைவர் ஸ்டாலினை நம்பி யாரும் வாக்களிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.

அமெரிக்காவில் சிகிச்சைப் பெற்று, கடந்த பிப்ரவரியில் சென்னை திரும்பிய தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தொடர்ந்து ஓய்வில் இருந்தார். இந்நிலையில் நேற்றைய தினம் சென்னையில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்த அவர், தி.மு.க தலைவர் ஸ்டாலினை தாக்கி பேசினார். பிரச்சாரத்தில் விஜயகாந்த் பேசும்போது,

‘தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை நம்பி யாரும் வாக்களிக்க வேண்டாம். அவரை நம்பி வாக்களித்தால் ஏமாந்து போவீர்கள். முதல்வர் பழனிசாமி நல்ல உள்ளம் படைத்தவர். மேலும், நல்ல உள்ளம் படைத்த வடசென்னை தே.மு.தி.க வேட்பாளர் மோகன்ராஜுக்கு முரசு சின்னத்தில் வாக்குகளை அளியுங்கள்’ என தெரிவித்தார்.

அதே போல் பா.ம.க வேட்பாளர் சாம் பால்-ஐ ஆதரித்தும் பேசினார். விஜயகாந்தின் பிரச்சாரத்தால் தே.மு.தி.க தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.