உலகின் மிக வயதான மனிதர் என சாதனை படைத்த நபர் மரணம்!

உலகின் மிக வயதான மனிதர் என்ற சாதனை படைத்த ரஷ்யாவைச் சேர்ந்த அப்பாஸ் இலியிவ், தனது 123வது வயதில் காலமானார்.

ரஷ்யாவைச் சேர்ந்த அப்பாஸ் இலியிவ் என்பவர், ஜார்ஜியாவின் அருகில் உள்ள இங்குஷெஸியா என்ற பகுதியில் வசித்து வந்தார்.

1896ஆம் ஆண்டு பிறந்த இவர், உலகின் மிக வயதான மனிதர் என்ற சாதனையைப் படைத்தார். அதற்கான சான்றிதழை இங்குஷெஸியா நகர நிர்வாகம் இவருக்கு அளித்தது தெரிய வந்துள்ளது.

ரஷ்யாவின் ராணுவத்தில் 1917 முதல் 1922ஆம் ஆண்டு வரை பணியாற்றிய இவர், இரண்டாம் உலகப்போரில் பங்கேற்றார். தினசரி பச்சை காய்கறிகளை தான் இவர் உணவாக உண்டு வந்தார் என்று கூறப்படுகிறது. அத்துடன் சுத்தமான பசும்பாலையும் அருந்தி வந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

தினமும் 11 மணிநேரம் தூங்கக் கூடிய அப்பாஸ், தன் வாழ்நாளில் மருத்துவமனைக்கே சென்றதில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், அப்பாஸ் இலியிவ் காலமானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.